திங்கள், 6 நவம்பர், 2023

Figurative Painting

 Heloo friends

welcome to my blog.

Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work and let me know the pros and cons in the comment section.

Here is a beautiful figurative painting that i would like to share with you all.

for making this beautiful painting we need the following materials:

canvas

acrylic paint

brushes

How to draw:

we need very few colors to do this beautiful painting.

to learn this beautiful textured figurative painting click on the below picture or click Prabha on wheels




சனி, 23 செப்டம்பர், 2023

திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.11.2023-ஆம் நாளுக்குள் அளிக்கலாம்.

புதன், 5 ஜூலை, 2023

நகரத்து காக்கா

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை!

''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்...'' என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா.

'பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்' என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா.

''நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா... இதெல்லாம் மனுசங்க வாழ்றது...''என்றது நகரத்து காக்கா.

''ஆமாமா... பார்த்தேன். ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே...''என்றது கிராமத்து காக்கா.
நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றியது. ''கீழே பாரு... எவ்வளவு வாகனம் போகுது...''

''வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு... கரும் புகை அடிச்சு அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறி காக்காவா ஆயிடப் போறாங்க!'' என்று 'கமெண்ட்' அடித்தது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே, ''உடம்பெல்லாம் புழுதி படிஞ்சு ஒரே 'கச... கச...'ன்னு இருக்கு. குளிக்கணும்... ஆத்துக்கு கூட்டிட்டு போ...'' என்றது கிராமத்து காக்கா.
ஆற்றை நெருங்க நெருங்க நாற்றம் அதிகரித்தது.
''ஆத்துலே குளிக்கணும்னு சொன்னா... இங்கே கூட்டிட்டு வந்து சாக்கடையை காட்டுறே...?'' என்றது கிராமத்து காக்கா.

''இந்த ஊருல இதுதான் ஆறு!''
''ஆறா...? இதுல எங்க ஊரு பன்னிக்குட்டி கூட குளிக்காது. ஆமா நீ எப்படி குளிக்கிறே?''
நகரத்து காக்கா தயங்கியவாறே சொன்னது...
''மழை பெய்யும்போதுதான் குளிப்பேன்...''
''அதுதான் உன் மேல் இவ்வளவு நாத்தமா?'' என்று முகம் சுளித்தது கிராமத்து காக்கா.

''சரி, வா கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்'' என்றது நகரத்து காக்கா.
''சாப்பிடுறதுக்காக எதுக்கு கடைத்தெருவுக்குப் போகணும்'' என்று ஆச்சர்யமாக கேட்டது கிராமத்து காக்கா.
''திருடி திங்கத்தான்''என்றது நகரத்து காக்கா.

''என்னது... திருடி திங்கவா...? கிராமத்துல 'கா...கா...'ன்னு கூப்பிட்டு சாப்பாடு போடுறாங்க. இங்கே திருட்டு பிழைப்பா இருக்கே! ச்சீ... ச்சீ... எனக்கு வேண்டாம்.

நான் கிராமத்துக்கே திரும்பப் போறேன். அங்கே கௌரவமாகவும், நிம்மதியாகவும் வாழலாம்'' என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது கிராமத்து காக்கா. அதை அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது நகரத்து காக்கா!

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

புத்திசாலி யார்???

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. 

அவர் சீடர்களிடம்,  

"சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள்"  என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.

முதலாமவன் கோபப்பட்டான், 

"சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்?" என்றான்.

முனிவர் அவனிடம்,  "சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்".

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றார்.

இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.

திங்கள், 24 ஏப்ரல், 2023

சவால்

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார். அந்த விவசாயி குதிரை வளர்த்திருக்கிறார். அந்த குதிரை ஒரு நாள் காட்டுக்குள்ள ஓடிடுச்சு..

உடனே பக்கத்து வீட்டுக்காரர் வந்து, அச்சோ பாவம்.. நீ எம்புட்டு துரதிஷ்டசாலியாயிருக்கப் பாரு... உன்னிடம் இருந்த ஒரு குதிரையும் ஓடிப்போயிடுச்சு அப்படினு சொன்னாராம்.

ஆம்..இருக்கலாம் என்ற விவசாயி கடந்து போய்விட்டார்.

மறுநாள் காலையில் அந்த குதிரை காட்டிலிருந்து மூன்று குதிரைகளை அழைத்து வந்தது..

மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. ஏய், நீ எம்புட்டு அதிஷ்டசாலி பாரப்பா.. ஒன்னுக்கு நாலா திரும்பி வந்திருக்கின்றது என்றார்..

இப்பொழுதும் விவசாயி ஆம்..இருக்கலாம் என்று கடந்துவிட்டார்.

மறுநாள், புதிதாக வந்த குதிரையை ஓட்டிப்பழகுகிறேன் என்று விவசாயின் மகன் கீழே விழுந்து கை கால்களை முறித்துக்கொண்டான்.

அப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்.. என்ன உனக்கு சோதனைக்கு மேல் சோதனையாக வருது.. குதிரையால அதிஷ்டம் வரும்னு பார்த்தா.. என்னப்பா இப்படியாகிப்போச்சு என்றபடி நகர்ந்தார்..

விவசாயி எப்பொழுதும் போல் எந்த சலனமும் இல்லாமல்.. ஆம் என்றபடி கடந்தார்.

மறு தினம், இராணுவத்திற்கு ஊரிலுள்ள இளைஞர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர். விவசாயி மகனுக்கு அடிபட்டதால் அவனை விட்டுவிட்டனர். பக்கத்து வீட்டுகாரரின் மகன் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டான். 

இப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. நீ அதிஷ்டசாலியாத்தான் இருப்பப்போல என்ற புலம்பலோடு நடந்தார்..

விவசாயி சற்றும் சலனமின்றி ஆம்.. இருக்கலாம் என்றபடி கடந்தார்.
நமக்கு இன்பமோ துன்பமோ இடைவெளி இல்லாம வந்துகிட்டுத்தான் இருக்கும். 

நம்ம அமைதியா இருந்தாலும் சுற்றியுள்ளோர் எதையாவது சொல்லி நம்ம அமைதிய ஆட்டிப்பார்க்கத்தான் செய்வார்கள்.

அதையும் தாண்டி.. அமைதியான வாழ்வு வாழ்றது தான் நமக்கான சவால்.

நித்தம் ஒரு சவால், அதைக் கடப்பதும் அதற்குள் கடப்பதும் அவரவர் கையில்..

கோபத்தை ஓரங்கட்டி அறிவைத் தூசிதட்டுனா போதும். ..!!!

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வரமா இல்லை சாபமா???

ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.

‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்
பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.

‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.

‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்’ என்று கேட்டான்.

‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள்.

‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்’ என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.

அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.
‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.
பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். 

பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. 


பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.

ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.

விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. 

கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.

அவன் யோசிக்கத் தொடங்கினான்.

‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.


படித்ததில் ரசித்தது...

சனி, 22 ஏப்ரல், 2023

பொறுப்பு

பசியோடு ஓட்டலுக்குள் நுழைந்தேன்.

‘‘இதோ பார்… நாளையிலிருந்து இந்த அழுக்கு பேன்ட்டெல்லாம்
போட்டுட்டு வரக்கூடாது… பளிச்னு சுத்தமா இருக்கணும்’’
என்று இளம் வயது சர்வரை எச்சரித்துக்கொண்டு இருந்தார்
முதலாளி.

தலையாட்டிவிட்டு என்னிடம் வந்தவன், ‘‘என்ன சாப்பிடறீங்க?’’
என்றான்.

பின்னாலேயே வந்த முதலாளி, ‘‘வர்றவங்களுக்கு முதல்ல
வணக்கம் சொல்லுடா’’ என்று கோபப்பட்டார்.

இட்லி, சாம்பார் கொண்டுவரச் சொன்னேன்.

வரும் வழியில் இன்னொரு சர்வர் மேல் மோதி, சாம்பார் கிண்ணம்
கீழே விழுந்தது.

‘‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு…? இப்படி மேலும்
கீழுமா கொட்டினா, லாபம் எங்கிருந்து வரும்?’’ – மறுபடி முதலாளி
எரிந்து விழுந்தார்.

இட்லி சாப்பிட்டதும், ‘‘அவ்வளவுதானா சார்?’’ என்றான் சர்வர்.

‘‘டேய்… அறிவு கெட்டவனே! இன்னும் என்ன சாப்பிடறீங்கன்னு
கேளுடா!’’ என்று அவன் தலையில் குட்டினார்.

எனக்குப் பரிதாபமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்து பில்லுக்குப்
பணம் தரும்போது முதலாளியிடம் கேட்டேன். 

‘‘ஏங்க… வறுமை தாங்க முடியாம பொழைக்க வந்தவன்கிட்ட இப்படியா கடுமையா நடந்துக்கறது?’’

முதலாளி சிரித்தபடி சொன்னார்… ‘‘சார்! இவன் என் பையன்.
தனியா ஓட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டான். அதான் நெளிவு
சுளிவை எல்லாம் கத்துக் கொடுக்கறேன்…’’

பையனும் சிரித்தான்.


படித்ததில் ரசித்தது...

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

பொறுமை

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், ”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். 

“மகளே! உன் பெயர் என்ன?"  என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள்.

"மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்"  என்றார் செல்வந்தர்.

துள்ளிக் குதித்தபடி ஓடிய  அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

கதையின் நீதி.
நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப் பெறலாம்.


படித்ததில் ரசித்தது....

வியாழன், 20 ஏப்ரல், 2023

கட்டுப்பாடுகள்

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..?  எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,

மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.

அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,

இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கசப்பான கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்.


படித்ததில் ரசித்தது...

புதன், 19 ஏப்ரல், 2023

வலிமை

திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.
அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.
ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.

நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,
''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். 

பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான். 

அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். 

அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.

இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான். 

திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,

''அய்யா,என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர். அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன். அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!



படித்ததில் ரசித்தது ....

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...