புதன், 25 டிசம்பர், 2013

நேசம்

திரைகூத்து பத்திரிகையில் இம்மாத வெளியீடாக எனது சிறுகதை, "நேசம்" வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...








                   
                      அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா  கடிகாரதையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக்  காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்காமல் அடம் பிடித்தது. சென்ற ஆண்டு அவனுடன் சேர்ந்து கொண்டாடிய அந்த பிறந்த நாள் நினைவுகள் மனக் கண்முன் வந்து வட்டமிட்டன.அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டே  எப்பொழுது தூங்கினாலோ அவளுக்கே நினைவில்லை.
கண் விழித்ததும் மீண்டும் அதே நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டன. காலண்டரில்  தேதி  11-12-13 எனவும் கடிகாரத்தில் காலை 3.00 மணி எனவும்  காட்டியது. எத்தனை மகிழ்ச்சிகரமான நாள் இது. பாரதியார்  பிறந்த நாளில் தானும் பிறந்ததை எண்ணி எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.இப்படி ஒரு அழகான நாள் எத்தனை பேருக்கு பிறந்த நாளாக அமைய முடியும். இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று சென்ற வருடத்திலிருந்து திட்டமிட்டிருந்தாள்.  ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை அந்த சந்தோஷமும்  அவள் முகத்தில் இல்லை. அவள் உயிருக்கு உயிராக நேசித்த அவனும் இன்று அவள் அருகில் இல்லை.அவன் எங்கு சென்றானோ?எப்பொழுது வருவானோ?யாருக்கும் தெரியாது. அவன் பிரிந்து சென்றதில் இருந்து அவள் இப்படி நடை பிணமாகி விட்டாள் அலைபேசி வாழ்த்துமொழி குறுஞ்செய்திகளால்  நிரம்பி வழிந்திருந்தது. அவனை தினமும் தேடி அலைவதே அவளது வேலையாக இருந்தது.

கண்களை கசக்கி  வெளியில் வந்து பார்த்தால் வாசல்கள் எல்லாம் குளித்து விட்டு வண்ண வண்ண பூ கோலம் அணிய தயாராகிக் கொண்டிருந்தன. இவளும் குளித்து "இறைவா எங்கிருந்தாலும் என் ரவி இன்று என்னை பார்க்க வரணும்" என்று வேண்டிக் கொண்டு  அந்த மார்கழி பனியில் தனது ஸ்கூட்டியை கிக்கினாள். தெருவெல்லாம் வண்ண கோலங்கள் கம்பளம் விரித்து வாழ்த்து சொல்லி வரவேற்றன.

அவள் எங்கு செல்கிறோம்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாமல் அவன் நினைவுகளை சுமந்தபடி காற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்தாள்.எதிரில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் ஒருகணம் நிலைகுலைந்து நடுரோட்டில் விழுந்தாள்.

"அம்மா "  என்று அலறி சுதாரித்துக் கொண்டு  எழுந்திரிக்க முயலுகயில் அவன் கை கொடுத்து தூக்கி விட்டான்.  தூசி  தட்டிக் கொண்டே தூக்கி விட்ட அவனை நன்றியுடன் பார்த்த அவள் பேச முடியாமல் ஊமையாகி நின்றாள்.அவள் கண்களை அவளாலையே  நம்ப முடிய வில்லை.இது நிஜம் தானா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை தன்னருகில் இழுத்து அவள் காதுக்குள் ஹப்பி பர்த்டே ஹனி " என்று கிசுகிசுத்தான்.

பூரித்து போய் அவன் மார்புக்குள் முகம் புதைத்து  அவனை இறுக அனைத்துக் கொண்டாள்,விட்டு விட்டால் மீண்டும் எங்கே காணாமல் போய் விடுவனோ என்கிற பயம் அவளுக்கு. அந்த அரவணைப்பு அவளுக்கு எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது. அவள் கூந்தலை இதமாக வருடிய படி அவளை அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்து சென்று அங்கிருந்த ஒரு  பெஞ்சில்  அமர்ந்தார்கள்.

 "ரவி"  என்று அவள் ஏதோ சொல்ல முயல  அதற்குள்  "ஷ்ஷ்ஷ்" என்று அவள் உதடுகளில் விரல் வைத்து  எதுவும் பேச வேண்டாம்  என்றான். அவள் பூ போன்ற முகத்தை தன் கைகளுக்குள் அள்ளி சிவந்திருந்த அவள் உதடுகளை தன் உதடுகளால் ஒற்றினான்.விழிகளை மூடி அந்த முத்தத்தை முழுமையாக ரசித்தாள். அவன் பிரிவின் தாக்கம் சோர்ந்து போன அவள் உடலில் தெரிந்தது. தூக்கமற்ற வறண்ட அவள் கண்கள்  அவளுக்கு அவன் மேல் இருந்த காதலை சொல்லியது.  கடந்த வருடம் இதே நாளில் அவளை விட்டு காணாமல் போன அவன் இன்று இப்படி திரும்பி வருவான் என்று அவளுக்கு தெரியாது. எது எப்படியோ அவனது அருகாமை அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

அந்த பனி மூடிய காலை பொழுதில் சூரியனும் மேக போர்வையிலிருந்து வெளிவர தயங்கும் நேரத்தில் அவனும் அவளும் மட்டும் இப்படி அன்பில் உறைந்து கிடப்பது சுகமாக இருந்தது.

மரத்தில் இரண்டு காகங்கள் அவர்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காதல் செய்துக் கொண்டிருந்தன. அவற்றை பார்த்து அவன் புன்னகைக்க அவள் வெட்கத்தில் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் .அவன் அவளை அணைத்துக் கொண்டு " நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் " என்றான். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

" உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்றாள். அவள் கண்களில் துளிர் விட்ட கண்ணீரை அவன் விரல்களால் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு .

 "இது நீ சந்தோசமாக இருக்க வேண்டிய நாள்.இப்படி அழலாமா?' என்றான்.

"அப்போ நீ செய்தது மட்டும்  சரியா?" எதிர் கேள்வி கேட்டாள்.

"இனி அப்படி செய்ய மாட்டேன்" என்றான்

"இனி எப்பவும் என் கூடவே இருப்பியா ?" குழந்தைத்தனமாக கேட்டாள்.

"ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

"நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து  செல்வாய் என்று நான் நினைக்கவே இல்லை.எதற்கு இப்படி செய்தாய் ரவி"

" என்னை மன்னித்துவிடு பிரியா எல்லாம் எதிர்பாராமல் நடந்து விட்டது" என்றான்

எது எப்படியோ அவனின் வருகை சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்தது அவளுக்கு.அவள் கண்களை மூடி நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தாள்.அவனை முதல் முதலாக பார்த்தது, அவன் தன் காதலை சொன்ன விதம், அவள் பெற்றோரிடம் அவர்கள் காதலை சொன்ன விதம், திடிரென்று ஒரு நாள் காணாமல் போனது, இப்பொழுது இப்படி மீண்டும் இணைந்தது என  எல்லாநிகழ்ச்சிகளும் ஒன்றின் பின் ஒன்றாக அவள் கண் முன் நிழலாடின. மீண்டும் கண்ணீர் உற்றென பெருகி ஆறாக அவள் கன்னங்களில் பாய்ந்து ஓடியது.

அவள் கண்களை இதமாக துடைத்த " ஐ லவ் யூ ஹனி " என்று அவள் கண்களை .ஆழமாக பார்த்தான்.

" ஐ லவ் யூ டூ " என்று குதூகலமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தான் அணிந்திருந்த சொட்டரை கழற்றி அவளுக்கு போர்த்தி விட்டான்.
அவனது இந்த அரவணைப்புக்காக தானே அவள் இத்தனை  நாள் ஏங்கி கிடந்தாள்.இந்த காதல்  நிறைந்த அன்பிலும் அரவணைப்பிலும் ஆயுள் முழுக்க அடைந்து கிடக்க தானே  விரும்பினாள்.

நீண்ட நேரம் அவர்கள் இருவரும் அங்கேயே ஒருவர் மடியில் மற்றொருவர் சாய்ந்து அன்பில் திளைத்தார்கள்.இந்த குறுகிய கால பிரிவு அவர்கள் காதலை மேலும் பலப்படுத்தியது.ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

"சரி வா வீட்டுக்கு போகலாம். உன்னை பார்த்தால் அம்மா அப்பா இரண்டு பெரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க " என்றாள்.

அவன் எழுந்து அவளுடன் கைகோர்த்து நடந்தான் அவன் தோளில் சாய்ந்து சாலையோர பூக்களை தன் மறுகையால் வருடியபடி நடந்தாள் அவள். அந்த பூக்களில் இருந்த பனித்துளிகளை இலைகளை அசைத்து அவன் மீது விழ செய்தாள். அவளது இந்த விளையாட்டுதனத்தை ரசித்தபடி நடந்தான். அவளிடம் ஓர் ஆண்டு காலமாக காணாமல் போயிருந்த புன்னகை,மகிழ்ச்சி எல்லாமே அவன் வருகையால் திரும்பி வந்து ஒட்டிக் கொண்டது .

சற்று தூரம் நடந்ததும் கூட்டமாக  மக்கள் இருந்ததை பார்த்து " ஏய், அது என் வண்டி " என்று கத்தி கூட்டத்தை விலக்கி நின்றிருந்த காவலர்களை தண்டி அந்த வண்டியின் அருகே ஓடினாள்.அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

அங்கே இறந்து கிடந்த அவள் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

"ர ....ர....வி.... அது....அது....." அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோளை இறுக பற்றிக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் கையை நீட்டி காட்டினாள்.

இறந்து கிடந்த அவள் தேகத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் காலையில் வண்டியில் வரும்போது அவளுக்கு நேர்ந்த விபத்து நினைவிற்கு வந்தது. அந்த விபத்தில் தான் ரவியை சந்தித்தாள். அப்படியென்றால் நீயுமா??? என்பதுபோல் கண்களில் நீர் ததும்ப அவனை பார்த்தாள்.

"ஆம். உன்னை பார்க்க வந்த அந்த இரவு ஒரு லாரி மோதி என் உயிரும் உடலும் உன்னை விட்டு பிரிந்தது" கண்களில் கண்ணீர் வழிய சொன்னான்.

"இனி நம்மை யாரும் பிரிக்கவே  முடியாது ரவி" என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.அவளின் அந்த நேசமே அவனுடன் அவளை சேர்த்தது. அவன் அருகில் இருப்பதால் மரணத்தை கூட ரசித்தாள்.

                                   ----------------------முற்றும் -----------------------

புதன், 11 டிசம்பர், 2013

தெரியுமா உங்களுக்கு ?

*1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம*்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

*7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

*9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'*  இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஆயுத பூஜை

பூ முடித்து,
பொட்டு வைத்து,
சந்தன வாசத்துடன்
சாலையை கடந்தன
வாகனங்கள் ....

மகனே

நீ தவழும் வயதில் - நான்
தாலாட்டினேனே...
நான்
தள்ளாடும் வயதில் - நீ
தவிக்க விட்டாயே...! 

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...