ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அவளை போல் ஒருத்தி

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ    

 மார்கழிப் பனியில், பனியோடு பனியாக ஒரு அழகான தேவதையாய் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். வியப்போடும் மகிழ்ச்சியோடும் கண்களை சிமிட்டாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவளும் வைத்த கண் வாங்காமல் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.ஒரு கணம் நடப்பது கனவா நிஜமா என்று புரியாமல் தன் தலையை சிலிப்பிக் கொண்டு அவளை பார்த்தான் விக்கி. அவள் அங்கு இல்லை. இவ்வளவு நேரம் அவள் நின்றிருந்த  எதிர் வீட்டு வாசலை பார்த்தான் அவள் அங்கு இல்லை இங்கு தானே இருந்தாள் இதற்குள் எப்படி மயமானாள் என்ற ஏக்கத்தோடு வெகு நேரம் அங்கேயே அவளின் வருகைக்காக  காத்திருந்தும் அவள் வராததால் ஏமாற்றம் கலந்த வருத்ததோடும், வாடிய முகத்தோடும் தன் வீட்டிற்குள்  நுழைந்தேன்.

             "விடிந்ததும் விடியாததுமா எங்கே டா போயிருந்தே விக்கி?வா வந்து இந்த பால் குடி" என்று சுதா பாலை வைத்துவிட்டு சமையலறைக்குள் பரபரபானாள்.பாலை குடித்துக் கொண்டே அவளை பற்றி யோசித்தான்.

அது அவள் தானா ? அவள்  என் நிம்மி தானா? இல்லை அவளாக இருக்க முடியாது.ஏன் முடியாது? அது அவளே தான்.அதே குழந்தை சிரிப்பு.அதே நிர்மலமான தெளிந்த நிரோடை போன்ற அழகிய முகம்.  புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட திராட்சை போன்ற கருவிழிகள்.நீர்வீழ்ச்சியை போல் அடர்த்தியான கூந்தல்.அதே எளிமை அது அவளே தான்.இல்லை அவளாக இருந்தால் ஏன் என்னை பார்த்தும்  ஓடிவரவில்லை?இப்படி அவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து அவனை திக்கு முக்காட செய்தன.

மகேஷிடம் சொல்லலாம் என்றால் அவனோ ஆபீசுக்கு செல்லும் அவசரத்தில் பரபரப்பாக இருந்தான்.இப்போ அவன்கிட்ட போனா திட்டினாலும் திட்டுவான் எதுக்கு வம்பு என்று அந்த எண்ணத்தை விட்டு விட்டு அமைதியாக இருந்தான்.ஆனால் அவள் நினைவுகள் அவனை விடுவதாக இல்லை.எதிர் வீட்டு வாசலில் மீண்டும் அவள் தென்படுவாலா? என ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

 "டேய் அங்கே என்ன பன்றே?" என்ற சுதாவின்  குரல் கேட்டு திடுக்கிட்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

"என்ன இவன் காலையிலிருந்து ஒரு மார்கமாக இருக்கிறான்?"என்று புலம்பிக் கொண்டே சென்றாள் சுதா .

அந்த அலமாரியில் ஒரு ஓரமாக அவளுடன் சேர்ந்து ஒரு கண்காட்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.அவளோடு ஜோடியாக எடுத்துக் கொண்ட ஒரே படம் அது தான்.அவளின் நினைவாக அவனிடம் இருப்பதும்  அந்த ஒரு புகைப்படம் தான்.ஒவ்வொரு முறை அவள் நினைவுகளில் அவன் திக்குமுக்காடும் பொழுது அந்த புகைப்படம் பார்த்து தான் ஆறுதல் அடைவான். இன்றும் அப்படி தான்.மனிதனின் கண்டுபிடிப்புகளில் அவனுக்கு மிகவும் பிடித்த  கண்டுபிடிப்பு புகைப்படம் தான், ஏனென்றால் அது அழிந்துவிட்ட உயிர்களை கூட அழியாமல் அடைகாக்கும் அற்புதமான ஒன்று.

அவனை அவள் பிரிந்து செல்லும் பொழுது அவனுள் விதைத்த அந்த  நேசம் மட்டும் காதல் விருக்ஷமாகி கசிந்து கொண்டிருந்தது.எத்தனை  எளிமையாக இருப்பாள்.அவளை அந்த கண்காட்சியில் தான் அவளை முதன்முதலில் பார்த்தான். வென்மேகமெல்லாம் ஒன்றாக திரண்டு அவள் மேனி ஆனது போல் அப்படி ஒரு கண்ணை பறிக்கும் வெண்மை.

அந்த கண்காட்சியில் அவளை ஒரு முறையாவது திரும்பி பார்க்காமல் சென்றவர் இல்லை என்றே சொல்லலாம் .அத்தனை அழகு,அறிவு இருந்தும் எந்த விதமான ஆரவாரமும் அலட்டலும் இல்லாமல் இருந்தது அவனை ஈர்த்தது. அவன் தன்னையே அறியாமல் அவள் காதலில் விழுந்தான்.அன்று அங்கு நடந்த அழகு போட்டியில் பெண்களுக்கான முதல் பரிசு  அவளுக்கும்  ஆண்களுக்கான முதல் பரிசு அவனுக்கும் கிடைத்தது. 

முதல் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் அவன் மேடையில் சத்தமாக கத்தி ஆர்பாட்டம் செய்து அவன் தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.ஆனால் அவளோ எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக பரிசை பெற்றுக் கொண்டு என்னிடம் வந்து கை குலுக்கி வாழ்த்து சொன்னாள். பதிலுக்கு நானும் வாழ்த்துடன் காதலை சொன்ன போது வெட்கத்துடன் மௌனத்தை சம்மதமாக தெரிவிக்க என் உள்ளே 

" காதல் சொன்ன கணமே ...
காற்றாய் பறக்குது மனமே " என்ற பாடல் ஒலிக்க மனம் ஆயிரம் வாட் பல்பு போல் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.
அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல அவன் கண்கள் மட்டும் அவளையே தழுவிக் கொண்டிருந்தன.அவள் விழிகளும் அவ்வப்பொழுது அவனை வருடத்தான் செய்தன.

பிறகு விருந்தின்போது அவள் தன் குடும்பத்தை விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.அப்பொழுது அவர்களுக்குள் பூத்திருந்த காதல் அவர்கள் சொல்லாமலே புரிந்தது.  அவளின் அருகாமை அவனுக்குள் ஒருவித கிளிர்பை ஏற்படுத்தியது.அவளின் அழகை ரசித்துக் கொண்டே உணவை ருசித்தான்.விருந்திற்கு பிறகு அனைவரும் அவரவர் குடும்பத்துடன் விட்டுக்கு கிளாம்பினர்.அவன் தேவதையும் அவள் குடும்பதுடன் கிளம்பினாள்.அப்பொழுது அவள் விழிகள் ஈரமாவதை அவன் கவனிக்க தவறவில்லை.அவனை பிரிந்து செல்ல மனமில்லாமல் தன் காருக்குள் ஏறினாள். அதுவரை அமைதியாக இருந்த அவன் கார்  கிளம்பியதும் அவனும் அதனை பின் தொடர்ந்து ஓடினான். கார் சற்று தூரம் சென்று நின்றது. அவன் மகிழ்ச்சியுடன் நிற்க அவள் சட்டென்று ஜன்னல் வழியாக சாலையில் குதித்து அவனை நோக்கி ஓடி வர இவன் மனம் உற்சாகமாக துள்ளி குதிக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் அவன் திளைக்க  எதிரில் வந்த வாகனம் அவள் உடலை பதம் பார்க்க  இரத்த வெள்ளத்தில் சிதறிய மாமிசமாய் அவள் உடல் சாலையெங்கும் சிதறி துடிதுடிக்க அவன் புரண்டு புரண்டு அழுதான்.

கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பாய் வேடிக்கை பார்க்க அவனை சமாதான படுத்த முடியாமல் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஒருவருடத்திருக்கு மேல் பித்துபிடித்தவன் போல்  இருந்தவன் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வருகிறான்.

"டேய் விக்கி,இந்த உனக்கு பிடிச்ச கோழிக்கறி செய்திருக்கேன் வந்து சாப்பிடு?"என்றால் சுதா.

அவன் மீண்டும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால் என்ன அதிசயம்?அவள் அங்கே நின்று கொண்டு இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனால் நம்ப முடியவில்லை.அப்பொழுது அந்த பெண்மணி வெளியே வந்து 

"ஏய்,உள்ளே வா" என்றாள்.

அந்த பெண்மணியை பார்த்ததும் அவன் மேலும் திடுக்கிட்டான்.அன்று அவன் நிம்மியுடன்   பார்த்த அதே பெண் இப்பொழுது இவளுடனும்.என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றான்  என்  நிம்மி இறக்க வில்லையா? இல்லை அவள் என் கண்முன் தானே தன் உயிரை விட்டாள் .ஆம் இவள் அவள் இல்லை என்று அவனுக்கு நன்றாக புரிந்தது அப்படிஎன்றால் இவள் யார்???  இவள் நிம்மி இல்லையென்றால் யார்? அவளை போல் ஒருத்தியா ??? அது எப்படி சாத்தியம்?

குழப்பத்தின்  உச்சியில் தத்தளித்து கொண்டிருந்தான். 
  
சாப்பிடமல் இருந்த தட்டை பார்த்த சுதா "என்ன ஆச்சி இவனுக்கு காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கான்.உடம்புக்கு ஏதாவது சரியில்லையோ என நினைத்துக் கொண்டே அப்படி என்ன தான் பார்க்கிறான் காலையிலிருந்து அந்த ஜன்னல ?"என்று எட்டிப் பார்த்தாள்.

எதிர்வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு வந்த பெண்மணி ஒரு அழகான பொமெரனியன் நாயுடன் வாக்கிங்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தாள்.

அதை பார்த்ததும் "ஓ இது தான் விஷயமா? நிம்மி நியாபகம் வந்திருச்சா ஐயாவுக்கு?"என்று அருகில் நின்றிருந்த நாயை தன் கைகளால் வருடினாள் சுதா.

"வா நாமும் அவங்களுடன் வாக்கிங் போகலாம்"என்றதும் துள்ளி எழுந்து வாலை ஆட்டிக் கொண்டு 'லொள் லொள்' என்று குறைத்துக் கொண்டே சுதாவுடன் கிளம்பியது விக்கி.

   
----------------------------------முற்றும்-----------------------












Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...