சனி, 12 ஏப்ரல், 2014

சொக்கன்

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ







மருத்துவமனையில் பிரசவ வலியுடன் தவித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவை விட அவள் கணவனுக்கு தான் தவிப்பு அதிகமாக இருந்தது. என்னென்றால் அவன் கூட பிறந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் மட்டுமல்லாமல் இவனுக்கு பிறந்த  முதல் குழந்தையும்  பொட்ட புள்ளையா பொறந்ததால்  இனி அவங்க குடும்பத்துக்கே கொள்ளி போடா வாரிசு இல்லை என்று கேலியும் கிண்டலுமாக பேசினார்கள்.

"இந்த குழந்தையாவது ஆம்பளை புள்ளையா பொறக்கலைன்னா எல்லோரும் என்ன சொல்லுவாங்களோ என்னமோ" என்றாள் வருத்தம் கலந்த குரலில் கண்ணம்மா.

"அட சும்மா இரு கண்ணம்மா,ஊரார் பேசுராங்கனோ உறவுங்க ஏசுராங்கனோ நாம கவலை பட்டு என்ன செய்யுறது? கடவுளா பார்த்து கண்ணு திறந்தா தான் உண்டு" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னானே தவிர அவனுக்கும் அதே கவலை தான்.

கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான்.

நர்ஸ்சம்மா வந்து உங்களுக்கு "பையன் பொறந்திருக்கான்னு" சொன்னதும் அவனுக்கு சந்தோசத்துல தல காலு புரியல.

கொழந்தைய பார்த்ததும்"டேய் மணி, எங்கப்பன் அந்த சொக்கன் தான் உனக்கு மகனா வந்து பிறந்திருக்கார்"என்று பெருமிதத்துடன் சொன்னாள் அவன் அம்மா குருவம்மா.

மணியும் அவன் மனைவியும் ரயில் வண்டிக்கு கரி அள்ளி போடுபவர்கள் போல் அட்டை கருப்பு. அவர்களுக்கு பிறந்த பொட்ட புள்ளையும் அவர்களை அச்சு வார்த்தது போல பிறந்தாள்.இப்போ தங்கம் மாதிரி பொன் நிறத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அந்த கடவுள் சொக்கனோட அருளால மூக்கும் முழியுமாய் ஒரு ஆம்பளை புள்ளை பொறந்திருச்சு.

மணிக்கு சந்தோசத்தில் கால்கள் தரையில் நிற்க வில்லை.தன் மகனை கையில் வைத்துக் கொண்டு தன் மனைவியை பார்த்து,
"ஏ புள்ள, நம்ம புள்ளைய பார்த்தியா? தோரா மாதிரி இருக்கான் இல்ல?"என்று பெருமிதத்துடன் மீசையை முறுக்கினான்.

அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள்.

"ஆத்தா இவனுக்கு என்ன பெயர் வெக்கலாம்?" அவன் அம்மாவிடம் கேட்டான்.

 "எங்க அப்பன் சொக்கன் பேரையே வை" என்றாள் வெற்றிலையை மென்றுக் கொண்டிருந்த குருவம்மா.

"அட போ ஆத்தா, என் மகன் ராசா மாதிரி இருக்கான் அவனுக்கு போய் சொக்கன்,குப்பன்னு பேரு வெக்க சொல்றியே.உனக்கு ஒன்னும் தெரியல ஆத்தா. அவனுக்கு ஸ்டைலா பேரு வெட்க போறேன்."என்று கடிந்துக் கொண்டு தன் மகனை கையில் அள்ளிக் கொண்டு கொஞ்சினான்.

"டேய் மணி,அது நம்ம குலதெய்வத்தொட பேருடா. அப்படி எல்லாம் சொல்லாதே தெய்வ குத்தம் ஆயிடும்" என்றாள் 

மணி அதை காதில் வாங்காமல் தன்  மகனை கொஞ்சிக் கொண்டிருந்தான். பின்னர் ஊரிலிருக்கும்  அவனுடைய சகோதரர்களுக்கு போன் செய்து
"அண்ணா நம்ம குடும்பத்துக்கு வாரிசு பிறந்தாச்சு" மகிழ்ச்சியோடு  சொன்னான்.

பிறகு "ஆத்தா நான் போய் புள்ளைக்கு துணிமணி வாங்கிட்டு வரேன்"என்று தனது சைக்கிளை கிளப்பினான்.

கடைக்கு சென்றவன் அங்கு கண்ணில் பட்டதை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்தான்.

தன மகனை கையில் தூக்கிக் கொண்டு "ராசு குட்டிக்கு அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு.இது சட்டை, இது தொப்பி, இது உனக்கு குளிராம இருக்குறதுக்கு சொட்டறு இத பார்த்தியா யானை பொம்மை, யானை வருது யானை வருது"என்று அவன் பாட குழந்தை சிரித்தது.

"புள்ள மேல எம்புட்டு பாசமோ பாரு இவனுக்கு"என்று சிரித்தபடி வெற்றிலை போட சென்று விட்டாள் குருவம்மா.

அப்பா புள்ளை விளையாட்டை ரசித்தபடி தூங்கிவிட்டால் அவன் மனைவி.

ஒரு நர்ஸ் வந்து "சார், குழந்தையை கொடுங்க டெஸ்ட் பண்ணனும்"என்றாள்.
விளையாடி கொண்டிருந்த அவன் "நாம அப்பறம் விளையாடலாம்."என்று அவளிடம் குழந்தையை கொடுத்தான்.

 நர்ஸிடம் குழந்தையை கொடுத்து விட்டு பொம்மைகளோடு பேசி கொண்டிருந்தான் அவன்.

வெற்றிலையை போட்டுவிட்டு சிவந்த வாயோடு வந்த குருவம்மா, மணி மட்டும் தனியாக பொம்மைகளோடு பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் "என்னடா தனியா பேசிகிட்டிருக்கே?புள்ள எங்கே?"என்றாள்.

"நர்ஸம்மா செக்கப்புக்கு கொண்டு போயிருக்காங்க" என்றான் சாதாரணமாக.

"செக்கப்பா என்ன செக்கப்பு?" என்று பதட்டத்தோடு சத்தமாக கேட்க தூங்கி கொண்டிருந்த அவன் மனைவி விழிக்க எல்லோரும் சேர்ந்து போய் டாக்டரிடம் தகவல் சொன்னார்கள்.

அப்படி எந்த நர்சும் குழந்தையை தூக்கி வரவில்லை என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்து போயினார்கள்.

அங்கு வேலை செய்யும் அனைத்து உழியரும் ஒன்று திரண்டு நின்றனர்.மணி அவர்களில் குழந்தையை வாங்கி சென்றவரை அடையாளம் காண முற்பட்டான் ஆனால் அந்த பெண் சாயலில் அங்கு யாரும் இல்லை.

குழந்தை கடத்தப்பட்ட தகவல்  போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.

"ஐயோ,பிரவேட்டு ஆஸ்பத்திரிக்கு போனா காசும் புடுங்கிட்டு சுக பிரசவம் ஆக விடாம ஆபரேசன் செய்யுறாங்கன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தா இங்க இப்படி குழந்தையகடத்திட்டாங்கலே. நான் என்ன செய்வேன் கடவுளே.இப்போ புள்ளைய நான் எங்கே போய் தேடுவேன்" என்று கதறினாள் கண்ணம்மா.

"அப்பனே சொக்கா, குடும்பத்துக்கு கொல்லி போடா வாரிசு பொறந்திருக்குனு சந்தோசபட்டேனே.அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நிலைக்காம இப்படி பண்ணிட்டியே " குமுறினாள் குருவம்மா.

  "அப்பனே சொக்கநாதா, சொக்கன்னு பேரு வெக்கமாட்டேன்னு சொன்னதுக்கா இப்படி பண்ணிட்டே? உனக்கு தான் ஸ்டைல ஆயிரம் பேரு இருக்கே?என் கையாலேயே என் புள்ளையை தூக்கி கொடுக்க வெச்சிட்டியே?"என்று கதறி அழுதான்.

அதற்குள் போலீசாரும் பத்திரிகைகாரர்களும் மருத்துவமனையை சூழ்ந்தனர்.

புள்ளையை பரிகொடுத்த துக்கத்தில் இருந்தவர்களிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டனர்/

மணி உடைந்து போனான்.ஆஸ்பத்திரியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் குழந்தையை எடுத்துச் சென்றவர்களின் முகம் பதிந்திருக்கும் என்று ஒரு மருத்துவர் கூற "குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது அவர்கள் மனதில்.

போலீசார் கண்காணிப்பு கேமராவை சோதனையிட்ட போது அது கடந்த பல மாதங்களுக்கு முன்பாக பழுதாகி விட்டதால் அதிலுள்ள ஹர்டு டிஸ்க் கழற்றப்பட்டு விட்டது என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

"யார் கண்பட்டதோ என்னவோ. அப்பனே சொக்கா"என்று கதறினால் குருவம்மா.

நொந்து போன மணி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
கால்கள் போன போக்கில் சைக்கிளை மிதித்தான். அவன் மனதில் பூத்த சந்தோச பூவை யாரோ பறித்து விட்டார்கள்"

ட்ராபிக்கில் நின்றிருந்த போது ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.
புள்ளையை தொலைத்த அவன் மனம் அவன் நினைவுகளையே அசை போட்டது. அந்த சின்ன சின்ன பிஞ்சு விரல்களால் அவன் வருடும்  போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திராட்சை போன்ற அழகிய கண்கள் என்று அவனையே சுற்றி சுற்றி வந்தன.

குழந்தை வெயில் தாங்க முடியாமல் வீறிட்டு அழுதது.அந்த பிச்சை எடுக்கும் பெண் சிக்னலில் குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாதை அப்பொழுது தான் கவனித்தான்.

சைக்கிளை அப்படியே விட்டு விட்டு சொக்கா சொக்கா என்று ஓடி போய் அவள் சிக்னலை கடந்து செல்லும் போது அவள் கையிலிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு சொக்கா சொக்கா என்று முத்த மழையால் அவன் கன்னங்களை நனைத்தான்.

அதை பார்த்ததும் அவள் திடுகிட்ட நின்றாள். அவன் குழந்தையை கொஞ்சி முடித்ததும் "அய்யா,என் குழந்தையை கொடுங்கோ நான் போகணும்" என்று கைகளை நீட்டினாள்.

அது அவன் குழந்தை இல்லை என்று உணர்ந்த அவன் ஏமாற்றத்துடன் குழந்தையை அவளிடம் திருப்பிக் கொடுத்து சோகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி சிணுங்கியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்தி எதிர் முனையில் கண்ணம்மா "என்னங்க, எங்கே இருக்கீங்க?நம்ம புள்ள கிடைச்சிட்டன். இதே ஆஸ்பத்ரில புள்ளை இறந்த ஒரு அம்மாக்கு நம்ம புள்ளைய வித்துட்டு போயிருக்கா அந்த பொம்பளை.நீங்க உடனே வாங்க" தொலைந்த சந்தோஷம் மீண்டும் கிடச்ச சந்தோசத்தில் உற்சாகமாக சொன்னாள்.

"அப்பனே சொக்கா, உனக்கு கோடி நன்றி என்புல்லையா திருப்பி கொடுத்திட்டே.அவனுக்கு சொக்கன்-னு உன் பேரையே வெக்கறேன்"என்று பூரித்துப் போய் ஆஸ்பத்திரியை நோக்கி சைக்கிளை மிதித்தான் மணி.


----------------------------------முற்றும்-----------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...