புதன், 8 மே, 2013

ஜாதகம்


சென்ற மாத "மகாகவி"  மாத இதழில் வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி.




சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ 


ஜிகு ஜிகு என்று கண்ணை பறிக்கும் வண்ணத்தில் சிலுக்கு சட்டை அணிந்து வந்த ரமேஷை பார்த்து "என்னடா மச்சான்,இன்னைக்கு பச்சை கலரு சிங்குசானு  சட்டை போட்டு வந்திருக்கே?"என்று கிண்டலடித்தான் சுனில்.

" என் ராசிக்கு இன்னைக்கு பச்சை கலர் சட்டை போட்டா நல்லதுன்னு காலைல ராசி பலன் நிகழ்ச்சியில பார்த்தேன் அதான் மச்சான் "என்று பதிலளித்தான்.

'ஏன்டா ,ஏற்கனவே கலர் கலரா கல்ல பொருக்கி கைல மோதிரமா மாட்டியிருக்கே.அது போதாதுன்னு இப்போ இது வேறயா? இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் வெறும் ஹம்பக்.இதை எல்லாம் நம்பினா ஏமாற்றம் தான் மிஞ்சும்.இத நீ எப்போ தான் புரிஞ்சுக்க போறியோ "என்று அங்கலாய்த்தான்.

மறுநாள் ஆபீசுக்கு சோர்வாக வந்த ரமேஷை பார்த்த சுனில்

" என்ன மச்சான், இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கே ஏதாவது பிரச்சனையா  ?" என்று அக்கறையோடு விசாரித்தான்.

" இன்னைக்கு காலையில எனக்கு பெண் குழந்தை பிறந்திரிச்சுனு ஊரிலிருந்து போன் பண்ணங்க" உற்சாகமற்ற குரலில் பதிலளித்தான்.

"  அட வாழ்த்துக்கள் மச்சான். இவ்வளவு சந்தோஷமான விஷயத்த இப்படி சோகமாவா சொல்றது. சரி ட்ரீட் எங்கே? உற்சாகமாக கேட்டான்.

"அட நீ வேற சும்மா இருப்பா.நானே நொந்து போயிருக்கேன்" என்று சலித்துக் கொண்டான்"

"என்னடா ஆச்சு? தாயும் குழந்தையும் நலம் தானே?" என்றான்.

"ஹ்ம்ம்"என்று தலையாட்டினான்.

"அப்போ ஏண்டா இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்கே?

"ஜாதகப்படி எனக்கு முதல் குழந்தை ஆண் தான் பிறக்கும்னு ரொம்ப நம்பிக்கையோட வீட்ல எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம்.ஆனால் இப்படி ஆயிடுச்சு " என்று ஏமாற்றம் கலந்த குரலில் சொன்னான்.

"அடச்சா...நான் என்னமோ ஏதோனு பயந்து போயிட்டேன். இதுக்கு தானா மூஞ்சிய இப்படி டல்லா வெச்சிருக்கே? அதான் ஜாதகம் பொய்யுனு தெரிஞ்சுகிட்ட இல்ல விடுடா.பிறந்தது எந்த குழந்தையா இருந்தா என்ன?இந்த குழந்தையோட பிறப்பால உனக்கு அப்பா என்கிற அந்தஸ்து கிடைத்திருக்கு.அந்த சந்தோசத்த கொண்டாடாம இப்படி ஜாதகம் ஜோசியம்னு புலம்புறியே"என்று கடிந்து கொண்டான்.

"அட ஆமாம் இல்ல,நான் அப்பா ஆகிட்டேன்  இல்ல.தேங்க்ஸ்டா  மச்சான். நான் இப்பவே ஊருக்கு கிளம்புறேன்.குழந்தை பிறந்த நேரம் எப்படி இருக்குனு ஜாதகம் எழுத சொல்லணும்.சார் வந்தா இந்த விஷயத்தை சொல்லி எனக்கு இரண்டு நாள் லீவு சொல்லிடு.நான் ஊர்லிருந்து வந்த பிறகு உனக்கு ட்ரீட் தறேன்"என்று கூறி புறப்பட்டவனை வியப்புடன் பார்த்தபடி இருந்தான் சுனில்...

                                                      ----- முற்றும் -----


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...