ஞாயிறு, 20 ஜூலை, 2025

என்னை நேசித்துக் கொண்டு...!!

 *தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம்*.

***

*துன்பம் உருக்கணைய உறுத்தியளிக்கிறது*!

*அன்பு வாழ வைக்கிறது*!

*அஞ்சாதவர்கே உலகம் சொந்தம்* 

••••

முன்போல் எல்லாம் 

இல்லை

இப்போது எவ்வளவோ 

மாறிவிட்டது


காலத்திற்கேற்ப 

வாழ்வியலும்தான்

இருந்தாலும் 

என்ன 


இப்போதும் 

கூட 

உவப்பில்லா உறவுகளை சட்டென உதறித்தள்ள முடிவதில்லை

விருப்பமற்ற இடத்திலிருந்து 

அக்கணமே வெளியேற இயலவில்லை

வேண்டாத கனவிலிருந்து பாதித்தூக்கத்தில்

விழித்துக்கொள்ள இயன்றதில்லை

புறக்கணிக்கும் மனிதர்களை 

மனதார மறுதலித்து 

நகர்ந்துவர மனம் வருவதில்லை

இன்னும் 

இன்னும்

இல்லை என்று உறுதியாய் உரைக்கத் தெரியவில்லை

வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுக்கத்தெரியவில்லை

பொருத்தமற்ற பயணத்தை

இடைநடுவே நிறுத்தத்தெரியவில்லை

இருப்பை உணராத இடத்தில் 

இல்லாமலேயே போகத்தெரியவில்லை


எப்போதும் 

அப்படித்தான்

ஒரு கசப்பான முடிவுக்குப் 

பயந்து 

முடிவே இல்லாத 

கசப்புகளோடு 

வாழப்பழகிக்கொள்கிறோம்

இல்லையா


உண்மையில்

சூழ்நிலைகளால்

சுயம் இழக்காத

ஒரு வாழ்வுக்காகத்தானே

நம் அத்தனை போராட்டங்களும் 


இருந்தும்

என்ன

வாழ்வின் 

இருண்மைகளோடுதான்

தினம் நூறுமுறை

சமரசமாகிப்போக வேண்டியிருக்கிறது

உயிர்த்திருத்தலின் 

பொருட்டு 

••

உங்கள் புத்தகங்கள், உங்கள் பற்றுதல்கள், உங்கள் மனைவி அல்லது கணவர் மீதுள்ள சார்புகள் - அது எதுவாக இருந்தாலும், அதைப் பாருங்கள். அதை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அந்த பற்றுதலின் வேராக பயம் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.


நாம் வார்த்தைகளுடன், கோட்பாடுகளுடன் விளையாடலாம். ஆனால் உண்மை என்று வரும்போது, நாம் பின்வாங்குகிறோம். ​நீங்கள் பின்வாங்கி, உண்மையை எதிர்கொள்ளாமல் இருக்கும்போது, ​​மாயையைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு அக்கறை இல்லை.

நீங்கள் மாயையைத் தாண்டிச் செல்வதை விட அதில் வாழ்வதையே விரும்புகிறீர்கள்.

பாசாங்குக்காரராக இருக்காதீர்கள். 

நீங்கள் ஒரு மாயையில், சுயமயக்கத்தில் வாழ விரும்புகிறீர்கள்.

அதுதான் உண்மை.

அதை எதிர்கொள்ளுங்கள்.

நீங்கள் அப்படி கவனிக்கும்போது, ​​மேலோட்டமான, சாதாரணமான அச்சங்களை அறிந்துகொள்வது மட்டுமில்லாமல், உங்கள் மனதின் ஆழமான பகுதிகளிலும் ஊடுருவுகிறீர்கள்.

பின்னர் பயம் முற்றிலுமாக முடிவுக்கு வருகிறது; மாயைக்கான காரணி முடிவுக்கு வருகிறது. நான் கடந்து வந்த பாதையை 

கொஞ்சம் திரும்பி பார்த்தேன்....

சிக்கல்களை பற்றி யோசித்தால் வலிகள் மட்டுமே தோன்றும். தீர்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் வழிகள் பிறக்கும். மாற்றி யோசித்தால் மாற்றம் உண்டு.


வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.


வாழ்க்கையில் நடந்ததை நினைத்து வருந்த வேண்டாம்..அதை மாற்றவோ, மாற்றவோ, மறக்கவோ முடியாது. எனவே அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.!


 வாழ்க்கையில் நம்மை எப்போதும் குற்றம் சாட்டுபவர்களுக்கு உண்மைகளை விளக்க வேண்டிய அவசியமில்லை... ஏனென்றால் அந்த உண்மைகளுக்கு முன்பே அவர்கள் தவறு கண்டுபிடிப்பார்கள்.


சவால்களும்...

ஏமாற்றங்களும்..

துயரங்களும்...

துரோகங்களும்...

தூவப்பட்டு கிடந்தன...!!


இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன் 

இத்தனையும் கடந்து வந்த பெருமையுடன்..

என்னை நேசித்துக் கொண்டு...!!


உயிருள்ள மீன் ஆஸ்துமா நோய்க்கான மருந்து

என் சித்தியின்  மகனுக்கு ஆஸ்துமா இருந்தாலும் அவன் மிகவும் அவதி பட்டு வந்தனர். அப்போது ஐதராபாத் மீன் மருத்துவம் பற்றி கேள்விபட்டு 
அங்கு அழைத்து சென்று மருந்து வாங்கி கொடுத்த பின்னர் இப்போது அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லமல் நிம்மதியாக இருக்கிறான். 
ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு  வரும் மருத்துவ சிகிச்சை ஆகும். ஆஸ்துமா நோய்க்கான மருந்து உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளும் மருந்துடன் கூடிய சிறு மீனை அப்படியே விழுங்கி விடுகிறார்கள்.

பாதினி மீன் மருந்து (பாதினி மிருகசிர மீன் என்றும் அறியப்படும்) இரண்டு அல்லது இரண்டரை அங்குல நீளமுள்ள உயிருள்ள  விரால் மீன் (murrel fish) வாயில் திணிக்கப்படுகிறது. இந்த மீன், மருந்துடன் ஆஸ்துமா நோயாளியின் வாய் வழியாக விழுங்க வைக்கப்படுகிறது. (இந்த மீன் வழவழப்பாக இருப்பதால் விழுங்குவதில் சிக்கல் இருப்பதில்லை). உயிருடன் உள்ள இந்த மீன் தன் வாலையும் செதில்களையும் அசைத்தபடி நோயாளியின் தொண்டையில் பயணித்து சளி அடைப்புகளை ) உடைத்து ஆஸ்துமாவை குணமாக்குவதாகக்  கூறப்படுகிறது. 

இந்த 45 நாட்கள் கடும் பத்திய உணவு மேற்கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளுமாறு நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் சிகிச்சை ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பாதினி மீன் மருந்து ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் நாட்களையொட்டி, ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரம் மிருகசீர்ஷா கார்த்திகை (வைகாசி (ஜ்யேஷ்ட) மாதம்) நன்னாளில் நோயாளிகளுக்கு தரப்பட்டு விழுங்க வைக்கப்படுகிறது. மூன்று மேலதிகமான மருந்தளவுகள் (doses of the extra medicine) நோயாளிகளுக்கு தொடர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களான ஆருத்ரா கார்த்திகை, புனர்வசு கார்த்திகை மற்றும் புஷ்யமி கார்த்திகை நாட்களில் வழங்கப்படுகிறது. (பதினைந்து நாட்கள் இடைவெளியில் மொத்தம் 45 நாட்கள் அடங்கிய காலம்). இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்கள் இந்த 45 நாட்கள் அடங்கிய காலகட்டத்தில் கடும் பத்தியம் அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சனி, 19 ஜூலை, 2025

எங்கள் வீட்டு கோங்குரா

செடி வளர்க்க பெரிய வீடு தேவையில்லை நான் எங்கள் வீட்டில் ஒரு சின்ன தொட்டியில் எப்படி வளர்க்கிறேன் என்று பாருங்கள் ஒரே தொட்டியில்
நான்கு ஐந்து செடிகள் வளர்ந்து இருக்கின்றன பாருங்கள். பராமரிப்பு எல்லாம் அப்பா அம்மா தான். 

புளிச்ச கீரை ஒருவகை புளிப்பு சுவையுள்ள கீரை. 
இதை தெலுங்கு மொழியில் கோங்குரா என்று அழைப்பார்கள். 
கோங்குரா பச்சடி அதாவது ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாய் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். இந்த ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். சூடான
சாப்பாட்டில் நெய் ஊற்றி இந்த  பச்சடியுடன் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.


புளிச்ச கீரை புளிப்பு சுவை கொண்டிருப்பதால், உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது. 

இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 
ரத்த சோகை மற்றும் பார்வைக் கோளாறுகளை குணப்படுத்த உதவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கோங்குரா சட்னி, துவையல், பச்சடி, ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது 
கோங்குரா சோறு, கோங்குரா புளியோதரை, கோங்குரா பருப்புச்சோறு போன்றவையும் தயாரிக்கப் பயன்படுகிறது. 


புளிச்சகீரையில் பச்சை தண்டு வகை மற்றும் சிவப்பு தண்டு வகை உள்ளது.

ஹிந்தியில் கொங்குரா அல்லது பிட்வா என்றும், ஆங்கிலத்தில் கெனாஃப் அல்லது ரோசெல்லே என்றும் அழைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் பயன்பாடு:
ஆந்திராவில் கோங்குரா என்ற பெயரில் பிரபலமாக உள்ளது.
புளிச்சக்கீரை கடையல், தொக்கு போன்றவற்றை சமைக்கலாம்..
கறி, சட்னி போன்ற பல உணவு வகைகளில் பயன்படுத்தலாம். 

செவ்வாய், 15 ஜூலை, 2025

தாதாபாய் நௌரோஜி

1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தாதா பாய் நெளரோஜி அவர்களின் பிறந்தநாள்…..
பெருந்தலைவர்களாகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், பால், லால்,காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக தாதாபாய் நௌரோஜியை குறிப்பிட்டுள்ளனர். 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4 தாதா பாய் நெளரோஜி அவர்கள் பிறந்தநாள் மகிழ்ந்து போற்றுவோம்.பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி போன்ற எண்ணற்ற முன்னணி தலைவர்கள் தாதா பாய் நெளரோஜியின் சீடர்கள்.இந்திய விடுதலைக்காக பாடுபட்ட மூத்த பெருந்தலைவர் (The Grand old man of India) என்று பெருமையோடு அழைக்கப்பட்டவர் நெளரோஜி.பம்பாயில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்.இந்திய விடுதலைக்கும் பெண்கள் கல்விக்கும் ,கைம்பெண்களின் மறுவாழ்விற்கும் புதிய எழுச்சியை உருவாக்கினார்.பல சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவாவதற்கு வித்தாக இருந்தவர் . பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய ஆசிரியர்.

 தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு, இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரித்தானிய ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.




கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள்

கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாளான இன்று  அவரை பற்றி இந்த பதிலில் விரிவாக தெரிஞ்சுக்கலாம் வாங்க.... 

கரம்பை மண்ணும், கொளுத்தும் வெய்யிலும், கரிசல் காடும், வானம் பார்த்த பூமியுமாக இருந்த அன்றைய விருதுநகரில் பிறந்த காமராஜர் முதலமைச்சராக வலம் வந்த போது, மொத்த இந்தியாவுமே தமிழகத்தைத் திரும்பி பார்த்தது.
அவரின் சிந்தனையில், மக்களின் பயன்பாட்டிற்காக, நலனுக்காக உதித்த எண்ணற்ற திட்டங்கள் தான் இன்று வரையில் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி  கொண்டிருக்கிறது.

தேர்தலில் ஒரு முறை தோல்வியைத் தழுவினார் காமராஜர். காமராஜரையே மக்கள் தோல்வியடைய வைத்தார்கள் என்று தான் வரலாறு இன்று வரையில் அதன் பக்கங்களில் கறுப்பு மையினால் எழுதிக் கொண்டிருக்கிறது. 

மக்கள் மனதில் இன்றளவிலும் காமராஜர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.  தமிழகத்தின் கல்வி கண்களைத் திறந்த தலைவராக காமராஜரைக் கொண்டாடுகிறோம். காமராஜரின் நடவடிக்கையால் அந்த 6000 பள்ளிகளும் மீண்டும் திறப்பு விழா கண்டன. 1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே இன்றளவும் புகழப்படுகிறது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. மக்களின் உண்மையான முன்னேற்றம் என்பது அவர்களது கல்வி அறிவை மேம்படுத்துவது தான் என்கிற முயற்சியில், அவரது ஆட்சி காலத்தில் தான் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கல்லூரிகள் என திரும்பி திசையெங்கும் கல்வி நிலையங்களாக அறிவொளி வீசிப் பறந்தன.

‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என பல தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர்.

தாகத்தால் தவித்த தமிழக மக்களின் தாகம் போக்க குமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர்.

இதுபோக கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், பவானி அணை, மேட்டூர் அணை என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களையும் ஆயிரத்து 600 ஏரிகளையும் வெட்டி, இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் திட்டங்களுக்கு முன்னோடித் தலைவராக இருப்பவரும், இருந்தவரும் காமராசர்தான்.

காமராசருக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. உலகத்திலேயே வேறு எந்த முதலமைச்சரும், ஒரு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்குள் அந்த திட்டத்தை முடித்து விட்டு, மீதமிருக்கும் பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்த்ததில்லை. காமராஜரின் ஆட்சி காலத்தில் இந்த அதிசயமும் நிகழ்ந்தது. அணை கட்ட ஒதுக்கப்பட்ட தொகையில் மீதம் பிடித்து, அந்த பணத்தையும் அரசாங்க கஜானாவில் சேர்த்தார்.

சினிமா நட்சத்திரங்கள் புகழின் உச்சாணியில் இருந்த காலம் அது. சென்னை கோடம்பாக்கத்தின் மேம்பாலம் எல்லாம் இல்லாமல் ரயில்வே சிக்னலுக்காக மணி கணக்கில் நடிக, நடிகையர்கள் காத்திருந்தார்கள். ஒரு முறை காமராஜரிடம், ‘சிக்னலுக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது கூட்டம் அதிகமாக கூடி விடுகிறது. ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்கிறார்கள். அங்கே ஒரு மேம்பாலம் கட்டினால் நல்லாயிருக்கும்’ என்று கோரிக்கை வைத்தார்கள் கலையுலகத்தினர்.

பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, ‘நிறைய சம்பாதிக்கிறீர்கள்… உங்கள் தனிப்பட்ட வசதிக்காக மேம்பாலம் கட்டச் சொல்கிறீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஏன், அங்கே மேம்பாலம் கட்டுவதற்கான செலவு தொகையை பங்கிட்டுக் கொள்ள கூடாது?’ என்று திருப்பி கேட்டார். அப்படி உருவானது தான் கோடம்பாக்கம் மேம்பாலம்.

இப்படியெல்லாம் வாழ்ந்த தலைவர் தான், தனது இறுதி காலத்தில் தனக்கென எதையும் சேர்க்காமல், 4 கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகள். அதிலும் ஒன்று கிழிந்தது, கையிருப்பாக 350 ரூபாய் ரொக்கப்பணத்துடன் மண்ணுலகில் இருந்து அவர் உடல் மறைந்தது ஆனால் தமிழகத்தில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்



 
 

ஞாயிறு, 13 ஜூலை, 2025

எங்கள் வீட்டு பொன்னாங்கண்ணி கீரை,

இன்று எங்கள் வீட்டு தொட்டியில் பறித்த பொன்னாங்கண்ணி கீரை.

நாங்கள் விதை போட்டோ செடி வாங்கியோ வளர்க்க வில்லை. கீரையை சமையலுக்காக கிள்ளிவிட்டுஅ தன் தண்டுகளைதூ ங்கிப் போடாமல் நட்டு வைத்தால் இப்படி freshஅ நம்ம வீட்லயே கீரை கிடைக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, சாதாரண பொன்னாங்கண்ணி, மற்றொன்று சிவப்பு பொன்னாங்கண்ணி. சிவப்பு பொன்னாங்கண்ணி பார்ப்பதற்கு குரோட்டன் செடி போல இருக்கும்

பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு, பொரியல், மசியல், சாம்பார் என பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வறுத்து, துணியில் வைத்து கண்களில் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கண் பார்வை தெளிவடையும் என்று எங்கோ படித்த நியபகம்.

இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை ஆகும். இது உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணமாக்கும் சக்தி கொண்டது. பொன்னாங்கண்ணி கீரையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன, உதாரணமாக இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை. இது கண் பார்வை தெளிவு, தோல் நோய்கள், உடல் சூடு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு, பொரியல், மசியல் போன்ற பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவடையும். கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும். 

பொன்னாங்கண்ணி கீரையை உடலில் தேய்த்துக் குளித்தால், சரும நோய்கள் குணமாகும். மேலும், உடல் சூடு குறையும்.
உடல் சூட்டை தணிக்கும் தன்மை பொன்னாங்கண்ணி கீரைக்கு உண்டு. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை குறைக்கலாம். 

பொன்னாங்கண்ணி கீரை மூலநோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது மூலநோயால் ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது. 

பொன்னாங்கண்ணி கீரை, பித்தப்பை மற்றும் கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும். காய்ச்சல் ஏற்பட்டால், பொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் காய்ச்சலை குணமாக்கலாம். 

சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள், பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் நீங்கும். 

பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 

வியாழன், 10 ஜூலை, 2025

குளோப் லைட்


வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் globe light எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த லைட் செய்வதற்கு ஒரு பலூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலூனை நன்றாக ஊதி காற்று வெளியேறாதவாறு நன்றாக இறுக கட்டி விடவும்.

பிறகு அதன் மீது பசை தடவி டிஷ்யூ பேப்பரை பலூன் முழுவதும் ஒட்டிக் கொள்ளவும் பிறகு அதன் மீது உலர்ந்த பூக்களையும் இலைகளையும் ஒட்டிக் கொள்ளவும் பிறகு மீண்டும் அதன் மீது டிஷ்யூ பேப்பரை ஒட்டி விடவும் நன்றாக காய்ந்து பின் ஒரு பல்பை மாட்டி அழகு படுத்தவும். நம்முடைய குளோபலைட் ரெடி.. இதன் செயல்முறை விளக்கத்தை கீழே உள்ள யூடுப் சேனலில் பார்த்து மகிழுங்கள்


வியாழன், 3 ஜூலை, 2025

சங்கு பூ ரங்கோலி


சங்கு பூ ரங்கோலி இந்த பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போன்ற இருப்பதால் இவற்றை சங்கு பூக்கள் என்கிறோம். 




புதன், 2 ஜூலை, 2025

நாட்டு நாவல் பழங்கள்

பச்சை, இளஞ்சிவப்பு 
மற்றும் கருச்சிவப்பு நிறத்தில் குண்டு குண்டாய் பளபளக்கும் இந்த
பழங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது அல்லவா? 
இவை  நம்ம ஊரு நாட்டு நாவல் பழங்கள் ஆகும் இந்த பழங்கள் எங்கள் செல்லக்குட்டியின் வீட்டில்  காய்த்த பழங்கள் அவற்றை புகைப்படம் எடுத்து  எனக்கு அனுப்பி இருந்தாள். 
அவற்றை நான் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.