திங்கள், 10 ஏப்ரல், 2023

யார் உனக்கு குரு?

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

 உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

 அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது. ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

 அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன். அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன். அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது. அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான். 

அவனிடம் போய் நான் இன்றைக்கு இங்கே எங்கே தங்க முடியும் என்று கேட்டேன்.

 அதற்கு அவன் இந்த இரவில் அது ரொம்ப சிரமம். ஒரு திருடனுடன் உங்களால் தங்க முடியும் என்றால் நீங்கள் என்னோடு தங்கலாம் என்றான்.

 நான் அவனுடன் ஒரு மாதம் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாள் இரவும் இப்போது நான் என்னுடைய வேலைக்கு போகிறேன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போவான்.

 அவன் திரும்பி வந்தவுடன் உனக்கு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்பேன். அதற்கு அவன் இன்று ஒன்றும் கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடியும் முயற்சி செய்வேன் என்பான். ஒருபோதும் அவன் நம்பிக்கை இழந்ததே கிடையாது. எப்போதும் சந்தோஷமாகவே இருந்தான்.

 நானும் ரொம்ப காலமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? மனது வருத்தப்படும். நம்பிக்கை இழந்து விடுவேன். அப்போதெல்லாம் இந்த திருடனுடைய விடாமுயற்சி தான் ஞாபகத்துக்கு வரும்.

என்னுடைய இரண்டாவது குரு ஒரு நாய்.

ஒரு சமயம் எனக்கு ரொம்ப தாகமாக இருந்தது. ஒரு நதியை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் வந்தது. அதற்கும் தாகம். ஓடி வந்து ஆற்றில் பார்த்தது. அதனுடைய நிழல் ஆற்றில் தெரிந்தது. அதை பார்த்து பயந்துவிட்டது. அதாவது தன் சொந்த உருவத்தையே கண்டு பயந்துவிட்டது. அதை பார்த்து குரைத்தது. திரும்பி ஓடியது. ஆனாலும் அதற்கு தாகம் அதிகமாக இருந்ததனால் அது மறுபடியும் திரும்பி வந்தது. இப்படி சில தடவைகள் பண்ணியது. இருந்தாலும் கடைசியில் தண்ணீரில் குதித்தது.
இப்படி குதித்த உடனே அதன் உருவமும் மறைந்து விட்டது. 

இதை பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், எவ்வளவுதான் பயம் இருந்தாலும் கூட ஒருத்தன் தைரியமாக காரியத்தில் இறங்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இந்த போதனை எனக்கு அந்த நாயிடம் இருந்து கிடைத்தது.

 என்னுடைய மூன்றாவது குரு யார் என்றால் அது ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன். அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன். ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா என்று

 ஆமாம் என்றது அந்த குழந்தை.

 சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது. இப்போது எரிகிறது. இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா என்று கேட்டேன்.

 அதற்கு அந்த குழந்தை சிரித்தது. இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது. அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் என்னிடம் இருந்து ஆணவம் அழிந்தது.

 நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகி விட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார் ஞானி. 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...