வெள்ளி, 7 ஏப்ரல், 2023

முயன்று பார்ப்போம்

கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.
 
ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று பலமாக வீசியக் காற்றின் காரணமாக மரத்திலிருந்து கீழே விழுந்தது.
 
அதிஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை. ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது. இந்தக் கழுகு முட்டை கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது ஆனால் முட்டைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்தில் இருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை தான் என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது.
 
சில நாட்களுக்குப் பிறகு மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் பறந்து விட்டது. அதே சமயம் மரத்தின் அடியில் அடைகாத்தக் கோழியும் தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு குப்பைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்று குப்பையைக் கிளறி அங்கிருந்த இரையைக் கொத்தி தின்றுக் கொண்டிருந்தது.

கூட்டத்தில் இருந்த கழுகும் மற்றக் கோழிகளை போலவே குப்பையைக் கீறிக் கொண்டிருந்தது.
 
ஒருநாள் வானத்தில் பறந்துக் கொண்டிருந்த மற்றக் கழுகுகளைப் பார்த்து கோழிகளோடு இருந்த கழுகு இன்னோரு கோழியைப் பார்த்து 
 
"நம்மளால அவுங்க மாதிரி வானத்துல பறக்க முடியாதா?" என்று கேட்டது
 
அதற்கு கோழி  "ஆண்டவன் அவுங்களுக்கு பறக்கின்ற திறமையைக் கொடுத்திருக்கான் நம்மளால அவ்வளவு உயரத்தில் பறப்பதற்கு வாய்ப்பே இல்லை " என்று சொன்னது
 
அதற்கு கழுகு கேட்டதாம் "நான் வேணும்னா முயற்சி பண்ணி பார்க்கவா "
என்றுக் கழுகு கேட்க அதற்கு கோழி "உன்னாலயும் என்னாலயும் எப்பவுமே அவுங்கள மாதிரி பறக்க முடியாது.
 
நாம வாழ்க்கை முழுவதும் உணவுக்காக இந்த மாதிரி குப்பையை தான் கீறிக்கிட்டே இருக்கணும் " என்று சொல்லி விட்டு நகர்ந்தது.
 
கோழி சொன்னது அனைத்தையும் உண்மை என்று நம்பிய கழுகு அதன் பிறகு பறப்பதற்கு முயற்சியே செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் கோழியைப் போலவே வாழ்ந்ததாம்.
 
 
நம்மில் பலரும் கழுகைப் போல பறக்கும் திறமைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் ஆனால் உரிய சந்தர்ப்பத்தில் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருந்தோமேயானால் கடைசி வரை நம் வாழ்வும் இந்தக் கதையில் வரும் "கோழியைப் போல் வாழும் கழுகு போல" ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...