திங்கள், 24 ஏப்ரல், 2023

சவால்

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார். அந்த விவசாயி குதிரை வளர்த்திருக்கிறார். அந்த குதிரை ஒரு நாள் காட்டுக்குள்ள ஓடிடுச்சு..

உடனே பக்கத்து வீட்டுக்காரர் வந்து, அச்சோ பாவம்.. நீ எம்புட்டு துரதிஷ்டசாலியாயிருக்கப் பாரு... உன்னிடம் இருந்த ஒரு குதிரையும் ஓடிப்போயிடுச்சு அப்படினு சொன்னாராம்.

ஆம்..இருக்கலாம் என்ற விவசாயி கடந்து போய்விட்டார்.

மறுநாள் காலையில் அந்த குதிரை காட்டிலிருந்து மூன்று குதிரைகளை அழைத்து வந்தது..

மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. ஏய், நீ எம்புட்டு அதிஷ்டசாலி பாரப்பா.. ஒன்னுக்கு நாலா திரும்பி வந்திருக்கின்றது என்றார்..

இப்பொழுதும் விவசாயி ஆம்..இருக்கலாம் என்று கடந்துவிட்டார்.

மறுநாள், புதிதாக வந்த குதிரையை ஓட்டிப்பழகுகிறேன் என்று விவசாயின் மகன் கீழே விழுந்து கை கால்களை முறித்துக்கொண்டான்.

அப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்.. என்ன உனக்கு சோதனைக்கு மேல் சோதனையாக வருது.. குதிரையால அதிஷ்டம் வரும்னு பார்த்தா.. என்னப்பா இப்படியாகிப்போச்சு என்றபடி நகர்ந்தார்..

விவசாயி எப்பொழுதும் போல் எந்த சலனமும் இல்லாமல்.. ஆம் என்றபடி கடந்தார்.

மறு தினம், இராணுவத்திற்கு ஊரிலுள்ள இளைஞர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினர். விவசாயி மகனுக்கு அடிபட்டதால் அவனை விட்டுவிட்டனர். பக்கத்து வீட்டுகாரரின் மகன் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டான். 

இப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.. நீ அதிஷ்டசாலியாத்தான் இருப்பப்போல என்ற புலம்பலோடு நடந்தார்..

விவசாயி சற்றும் சலனமின்றி ஆம்.. இருக்கலாம் என்றபடி கடந்தார்.
நமக்கு இன்பமோ துன்பமோ இடைவெளி இல்லாம வந்துகிட்டுத்தான் இருக்கும். 

நம்ம அமைதியா இருந்தாலும் சுற்றியுள்ளோர் எதையாவது சொல்லி நம்ம அமைதிய ஆட்டிப்பார்க்கத்தான் செய்வார்கள்.

அதையும் தாண்டி.. அமைதியான வாழ்வு வாழ்றது தான் நமக்கான சவால்.

நித்தம் ஒரு சவால், அதைக் கடப்பதும் அதற்குள் கடப்பதும் அவரவர் கையில்..

கோபத்தை ஓரங்கட்டி அறிவைத் தூசிதட்டுனா போதும். ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...