திங்கள், 10 ஏப்ரல், 2023

வடை போச்சே

ஒருவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சனை இருந்தது. அவன் தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்திக்க சென்றான்.

 அவன் மருத்துவரை சந்தித்து "டாக்டர் ஐயா, எனக்கு தினமும் படுக்கும் பொழுது கட்டிலுக்கு கீழே யாரோ ஒரு ஆள் படுத்து இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எட்டிப் பார்த்தால் அப்படி யாரும் அங்கு இல்லை இப்படி தினமும் தோன்றுவதால் பயத்தில் என்னால் தூங்கவே முடிவதில்லை" என்றான். 

அதற்கு டாக்டர் சொன்னார் "தம்பி உங்கள் பிரச்சினையை சரி செய்து விடலாம். வாரத்திற்கு ஒருமுறை வீதம் ஐந்து செசன்ஸ் என்னிடம் வாங்க சரி பண்ணிடலாம்" என்றார் டாக்டர்.

 மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் "ரொம்ப நன்றி டாக்டர் எவ்வளவு செலவாகும்" என்று கேட்டான்.

 பதிலுக்கு டாக்டர் "ஒரு செசன்ஸ்க்கு வெறும் 2000 ரூபாய் தான். வழக்கமாக நான் 2500 ரூபாய் வாங்குவேன் ஆனால் நீங்களோ நம்ம ஊருன்னு சொல்லிட்டீங்க அதனால உங்களுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டும் தான்" என்று புன்னகை புரிந்தார்.

"அப்படியா டாக்டர் அப்ப நான் அப்புறமா வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றான்.

 ஆனால் அவன் வரவே இல்லை.

 இரண்டு மாதம் கழித்து ஒரு தேனீர் கடையில் தேனீர் அருந்த சென்ற போது அவனை சந்தித்தார் டாக்டர்.

"என்ன தம்பி அப்புறம் வரவே இல்லை?" என்று டாக்டர் கேட்டார்.

" ஓ அதுவா அந்த பிரச்சனை சரியாயிடுச்சு" என்றான் அவன்.

அதைக் கேட்ட டாக்டர் "அது எப்படி சரி ஆச்சு?" என்று ஆவலுடன் கேட்டார்

"அது ஒன்னும் இல்ல டாக்டர், நம்ம பக்கத்து கடை அண்ணாச்சி ஒரு ஐடியா சொன்னார். பிரச்சினை சரியாயிடுச்சு. அது மட்டும் இல்ல நல்ல லாபமும் வந்துச்சு" என்றான் அவன்.

 அதைக் கேட்டதும் டாக்டருக்கு குழப்பமாக இருந்தது. பிரச்சனை சரியாயிடுச்சு சரி ஆனால் லாபம் எப்படி வந்துச்சு என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். உடனே அவனிடம் "என்ன தம்பி சொல்றீங்க? கொஞ்சம் விவரமா சொல்லுங்க" என்றார்.

" அது ஒன்னும் இல்லை டாக்டர், நம்ம அண்ணாச்சி கிட்ட போய் என்னோட பிரச்சனை பற்றி சொன்னேன்..
உடனே அதற்கு அவர் கட்டிலை விற்றுவிட்டு ஒரு பாய் வாங்கி தரையில் விரிச்சி படுத்து தூங்கு என்று சொன்னார்.

 நானும் 2000 ரூபாய்க்கு கட்டிலை விற்று விட்டு 200 ரூபாய்க்கு பாய் வாங்கி விட்டேன். இப்பொழுது பாயில் தான் படுக்கிறேன். நல்ல தூக்கமும் வருது. எந்த பயமும் வரலை. லாபத்திற்கு லாபம்.  தூக்கத்திற்கு தூக்கம். சந்தோஷமா இருக்கேன்" என்று விளக்கமாக சொன்னான்.

அதைக்  கேட்ட டாக்டர் "அடடா வடை போச்சே"   என்ற வருத்தத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

1 கருத்து:

  1. ஹ..ஹாஹா... டாக்டருக்கு வடைதான் போச்சு... ஆனால் எனக்கோ... சிரிச்சு சிரிச்சு எண்ட்ற பிராணனே போச்சே... பரமண்டலத்திலிருக்கும் என் பரமபிதாவே...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு